பொதுவாகக் கடலை, தேங்காய், எள், கடுகு போன்ற இயற்கை வித்துகளிலிருந்து எண்ணெயை எடுக்கிறோம். இந்த எண்ணெயை முன்பு செக்கில் ஆட்டி எடுத்துவந்தோம். அந்த எண்ணெயில் சின்னச் சின்னத் துகள்கள் இருக்கும். சிறிது அடர்த்தியாக இருக்கும். இயற்கை மணமும் நிறமும் இருக்கும். விஞ்ஞான வளர்ச்சி காரணமாக இப்போது இதை நவீனத் தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு சுத்தப்படுத்தி எடுக்கிறோம். இதைத்தான் `ரீஃபைன்ட் எண்ணெய்’ (Refined Oil) என்கிறோம். பொதுவாகச் சொன்னால், எண்ணெயில் உள்ள துகள்களை நீக்கி, அடர்த்தியைக் குறைத்து, நிறத்தை வசீகரப்படுத்தி, மணத்தைக் கூட்டிச் சுத்தமான எண்ணெயாகத் தயாரிப்பது என்று அர்த்தம்.
எண்ணை பிழிந்தெடுக்கும் இடத்தில் என்னதான் நடக்கிறது?
பார்ப்பதற்குக் கண்ணாடிபோல் பளிச்சென்று இருக்கும் இந்த எண்ணெயின் தயாரிப்பில் பல கட்டங்கள் உள்ளன. முதலில் எண்ணெயின் வழவழப்புத் தன்மையைக் குறைக்க ‘டீகம்மிங்க்’ (Degumming) எனும் சுத்திகரிப்பு முறையைப் பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் எண்ணெயில் உள்ள புரதம் மற்றும் ‘பாஸ்போ லிப்பிட்’ கொழுப்பை அகற்றிவிடுகிறார்கள். பிறகு, ‘நியூட்ரலைஸிங்’ (Neutralising) முறையில் காஸ்டிக் சோடாவைச் சேர்த்து இன்னும் கொஞ்சம் கொழுப்பை அகற்றுகிறார்கள்.
இதன் மூலம் எண்ணெயின் இயல்பான சுவை நீங்கிவிடும். இதைத் தொடர்ந்து எண்ணெயின் நிறத்தை மாற்ற `பிளீச்சிங்’ (Bleaching) செய்கிறார்கள். துணியிலிருந்து அழுக்கை அகற்ற வேதிப்பொருட்களைப் பயன்படுத்துவதுபோல், எண்ணெயிலும் பல்வேறு வேதிப்பொருட்களைக் கலந்துதான் பிளீச்சிங் செய்கிறார்கள். இறுதியாக, `வாக்குவம் டிரையிங்’ (Vacuum drying) எனும் கட்டத்தில் எண்ணெயைக் குளிரவைக்கிறார்கள். இப்படிப் பல கட்டங்களில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயைத் தேவைக்கு ஏற்ப பாட்டில், டின், பாக்கெட்களில் அடைத்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள்.
இப்படியாக இயற்கை எண்ணெயின் வெப்பநிலையை மாற்றி, பல வேதிப்பொருட்களைச் சேர்த்து, கரோட்டினாய்ட்ஸ், ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் போன்ற பல முக்கியச் சத்துகளை அகற்றி, சாறு பிழிந்த கரும்புச் சக்கை போலத்தான் ரீஃபைன்ட் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இது செக்கில் தயாரிக்கப்படும் இயற்கை எண்ணெய்க்கு எந்த வகையிலும் ஈடாகாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
என்னென்ன கலக்கிறது?
சுத்திகரிப்பு செய்யப்படும் எண்ணெ யில் தவிட்டு எண்ணெய், மினரல் எண்ணெய், பருத்தி எண்ணெய், அர்ஜிமோன் எண்ணெய் எனப் பலதரப் பட்ட எண்ணெய்களைக் கலப்படம் செய்வதாக ஊடகங்களில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் பல உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன. இம்மாதிரியான மோசமான சுத்திகரிப்பு முறையில் பல வகை எண்ணெய் தயாராகிறது என்றாலும், சூரியகாந்தி எண்ணெய்தான் சந்தையில் அதிகம் கிடைக்கிறது; மக்களிடையே அதிகப் பயன்பாட்டிலும் உள்ளது. இதில் பாமாயிலை மிக அதிக அளவில் கலப்படம் செய்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
பாமாயிலில் கெட்ட கொழுப்பின் அளவும் ஊடுகொழுப்பும் (Trans fat) அதிகமாக இருக்கும். இந்த இரண்டுமே இதயத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. அதனால் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் ஆரோக்கியம் காக்கும் என்று உறுதி சொல்வதற்கில்லை.
இயற்கை எண்ணெயே சிறப்பு
எண்ணெய் பயன்பாட்டைப் பொறுத்த அளவில் நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும். கொழுப்பு நீக்கப்பட்டது என்று விளம்பரம் செய்யும் எண்ணெயிலும், கொழுப்பு இருக்கவே செய்யும். கொழுப்பு இல்லை என்றால், அது எண்ணெய் இல்லை என்றே கருத வேண்டும். நாகரிகம் என்ற பெயரில் போலியான கவர்ச்சிகளுக்கும் நாக்கு ருசிக்கும் மயங்கிச் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்தத் தொடங்கியதன் பலன்களை இப்போது அனுபவிக்கிறோம்.
உடற்பருமன், உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் எனப் பலதரப்பட்ட நோய்களை இளம் வயதிலேயே பெற்று ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொண்டிருக்கிறோம்.
மீண்டும் இயற்கை வழிக்குத் திரும்பினால் மட்டுமே நம் ஆரோக்கியத்தைக் காக்க முடியும். எனவே, சுத்திகரிப்பு எண்ணெய் வாங்குவதற்குப் பதிலாகச் செக்கு எண்ணெயை வாங்குங்கள். அது உண்மையிலேயே செக்கில்தான் ஆட்டப்படுகிறதா என்பதை உரிய வழியில் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்,
Tags: refined oil chekku oil
How is refined oil prepared