‘மலச்சிக்கல் அதனால் மனிதனுக்குப் பல சிக்கல்’ என்ற மருத்துவமொழி ஒன்று உண்டு. அந்தச் சிக்கல்களில் முதன்மையான சிக்கலாக இருப்பது மூலநோய். நம் உடலும் ஓர் இயந்திரம்தான். அது இயங்குவதற்குத் தேவையான லூப்ரிகன்ட் (Lubricant) இல்லையென்றால், மிகவும் வறட்சியாக இயங்க ஆரம்பிக்கும். அதன் பயனாக மலச்சிக்கல், மூலநோய் போன்ற பாதிப்புகள் உண்டாகும். இந்த வயதுடையவர்களுக்குத்தான் மூலநோய் வரும் என்றில்லை; சரியான உணவுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றாமல், சரிவிகித உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பவர்கள் அனைவருக்கும் மூலநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.
கோடைக்காலம் என்றால் சொல்லவே வேண்டாம். வெயிலால் உடல் எப்போதும் கொதிநிலையிலேயே இருக்கும். அதனால் உடல், உணவைச் செரிமானம் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அந்த நேரத்தில் உடலை இன்னும் சூடாக்கும் உணவுகளைச் சாப்பிட்டாலும், பசிக்கும்போது சாப்பிடாமல், அதிக நேரம் வயிற்றைக் காயப்போட்டாலும் மூலநோய் உண்டாக வாய்ப்பு உண்டு.
மூலநோய் பாதிப்பு இருந்தாலும், பலர் அதை வெளியில் சொல்வதற்குக் கூச்சப்படுவார்கள். மருத்துவர்களைச் சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்வதற்குத் தயங்குவார்கள். அதனாலேயே பாதிப்பு இன்னும் அதிகமாகி, அறுவைசிகிச்சை செய்யும் அளவுக்குக் கொண்டு போய்விடும். ஆரம்பத்திலேயே இதைச் சரிசெய்துவிட்டால் பெரிய பாதிப்பு ஒன்றுமில்லை.
ஆசனவாயில் உள்ள ரத்தக்குழாய்களில் வீக்கம் ஏற்பட்டு, அதனுள்ளேயிருக்கும் ரத்த நாளத்தின் சுவர் மெல்லியதாகி, மலம் கழிக்கும்போது ரத்த நாளங்கள் கிழிந்து ரத்தம் வெளியேறுவதை ‘பைல்ஸ்’ என்று சொல்கிறோம். வலியில்லாமல் ரத்தம் மட்டும் வெளியேறுவது ஸ்டேஜ் 1. மலம் கழிக்கும்போது ரத்தத்தோடு சதையும் வெளியே வந்து, மலம் கழித்து முடித்தவுடன் ஆசனவாய்க்கு உள்ளே சதை தானாகச் சென்றுவிடுவது ஸ்டேஜ் 2. ரத்தத்தோடு சதை வந்து, மலம் கழித்து முடித்த பின்னர் சதை தானாக உள்ளே செல்லாமல் அழுத்தம் கொடுத்து, உள்ளே சென்றால் அது ஸ்டேஜ் 3. எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் சதை உள்ளே செல்லாமல், ரத்தத்தோடு வெளியே வந்து நிற்பது ஸ்டேஜ் 4. கடைசிநிலைக்கு வந்துவிட்டால் கண்டிப்பாக அறுவைச் சிகிச்சை செய்தாக வேண்டும். பைல்ஸின் ஆரம்பகட்டத்தில் ரத்தம் மட்டும்தான் வெளியேறும்’ வலி இருக்காது. ஆனால், அடுத்தடுத்த கட்டங்களில் வலியும் உண்டாகும்.
அதிக நேரம் ஒரே நிலையில் (Erect posture) உட்கார்ந்திருப்பது, சரியான நேரத்தில் மலம் கழிக்காமல் இருப்பது, முழுமையாக இல்லாமல் அரைகுறையாக மலம் கழிப்பது ஆகியவைதான் பைல்ஸ் உண்டாவதற்கான முக்கியமான காரணங்கள்.
மலத்தை இறுகவிடாமல் பார்த்துக்கொண்டு, தினமும் ஒரே நேரத்தில் மலம் கழிப்பது… அதிக நேரம் ஒரே நிலையில் உட்காராமல், எழுந்து நடப்பது போன்றவற்றைச் செய்தால் இந்தப் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
மாவுச் சத்துகள் நிறைந்திருக்கும் உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது. பிரெட், மைதா போன்ற உணவுகளை மட்டுமே உட்கொள்ளக் கூடாது. பீன்ஸ், அவரைக்காய், கொத்தவரங்காய், புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளையும், ஆப்பிள், கொய்யா போன்ற பழங்களையும் சாப்பிட்டால் மலம் இறுகாமல் மென்மையாகவும், உதிரியாக இல்லாமல் மொத்தமாகவும் வெளியேறும். மலச்சிக்கல் உண்டாகாது. அதனால், மலம் கழிப்பதில் சிரமம் இருக்காது. அசைவ உணவுகளைச் சாப்பிடவே கூடாது என்பதில்லை; அதை மட்டுமே அதிகமாகச் சாப்பிடக் கூடாது.
எந்த உடல்நல பாதிப்பும் இல்லாதவர்கள் ஒருநாளைக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். அதையும் ஒரே நேரத்தில் மொத்தமாகக் குடிக்கக் கூடாது. சீரான இடைவெளியில் குடிக்க வேண்டும்.
பைல்ஸ் ஆரம்பநிலையில் இருந்தால், மேற்கண்ட பழக்கவழக்கங்களைப் பின்பற்றினாலேகூட சரிப்படுத்திவிடலாம். இரண்டாவது நிலைக்குச் (Stage 2) சென்றுவிட்டால், மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. அதையும் கடந்து ஸ்டேஜ் 3, 4 நிலைக்குச் சென்றுவிட்டால் அறுவைசிகிச்சை செய்தாகவேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும்.’’
மூலநோய் வராமல் எப்படித் தற்காத்துக்கொள்வது என்பதை விளக்குகிறார் சித்த மருத்துவர் கருணாகரன்…
“உடல் சூடுதான் மூலநோய்க்கு முதன்மைக் காரணம். `அனில பித்த தொந்தமலாது மூலம் வராது’ என்று சித்த மருத்துவத்தில் சொல்வதுண்டு. வாதத்தோடு பித்தம் சேர்வதால்தான் இதுபோன்ற பாதிப்புகள் உண்டாகின்றன.
கோடைக்காலத்தில் புளிப்பு, காரம், உப்பு… என வறட்சித்தன்மை அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட்டால் மூலநோய் உண்டாகும். அதனால் இவற்றைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். உட்காரும்போது குஷன் சேர்களைத் தவிர்த்துவிட்டு, வயர்களால் பின்னப்பட்ட, பிரம்பால் ஆன சேர்களைப் பயன்படுத்த வேண்டும். முடியாத பட்சத்தில், சேர்களுக்கு மேலே இலவம்பஞ்சு அல்லது தேங்காய்ப்பூ துண்டுகளை விரித்து உட்காரலாம். வாரத்துக்கு இரண்டு நாள்களுக்காவது எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். வெயிலில் அதிக நேரம் அலைவது, அதிக தூரம் வாகனங்கள் ஓட்டுவது போன்றவற்றை முடிந்தவரை தவிர்த்துவிட வேண்டும்.
பசலைக்கீரை, வெந்தயக்கீரை, சுக்காங்கீரை ஆகியவற்றைச் சாப்பிட்டால் மூலநோய் ஏற்படாமல் தற்காத்துக்கொள்ளலாம். அசைவ உணவுகளில் சிக்கனைத் தவிர்த்துவிடுவது நல்லது. அது உடல் சூட்டை ஏற்படுத்திவிடும். மீன் சாப்பிடலாம், அதிலும் விலாங்கு மீன் மூலத்தைக் குணப்படுத்தும். ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை முழுமையாகத் தவிர்த்துவிடுவது நல்லது. கற்றாழை, மாதுளை, அத்திப்பழம் போன்றவற்றின் பழச்சாறுகளைக் (ஐஸ் இல்லாமல்) குடிக்கலாம். மாம்பழத்தை மட்டும் தவிர்த்துவிடுவது நல்லது.
இளநீர், பதநீர் , மோர் போன்றவற்றை அருந்துவது நல்லது. பீன்ஸ், அவரைக்காய், வெண்டைக்காய் போன்ற நார்ச்சத்துகள் நிறைந்த காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். சிறிய வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
மலம் கழிக்கும்போது உண்டாகும் ரத்தத்தைக் கட்டுப்படுத்த வாழைப்பூவை இடித்து, சாரெடுத்துக் குடிக்கலாம். மாங்கொட்டையிலுள்ள பருப்பைத் தூளாக்கி, மோரில் கலந்து குடிக்கலாம். கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கைத் தவிர மற்ற கிழங்குகளைச் சாப்பிடக் கூடாது.
மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் ஆமணக்கு எண்ணெயை தினமும் ஒரு டீஸ்பூன் இரவு தூங்குவதற்கு முன்பாக உட்கொள்ளலாம். ஆசனவாயிலும் தடவிக்கொள்ளலாம்.’’
piles moolam prevent hemorrhoids piles